ஹமாஸ் குழுவிற்கு எதிராக இரண்டாம் கட்ட போரை தொடங்கியுள்ளோம்: இஸ்ரேல் பிரதமர்
- காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 22-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும், நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.