இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பும் பாக். ஊடகத்தின் உரிமம் ரத்து- ஷபாஸ் செரீப் அரசு அதிரடி
- துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சதியின் பின்னணியில் பிரதமர், உள்துறை அமைச்சர் இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டி இருந்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி, கடந்த வாரம் தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை அவர் தொடங்கிய நிலையில், பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரில் இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை கொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அந்நாட்டு ஊடகங்களுக்கு ஷபாஸ் ஷெரீப் அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான்கான் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.