இந்து மத துறவி கைது: அமெரிக்க பாடகி கண்டனம்
- இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் அடித்துக் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்கா- அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான மேரி மில்பென் இந்து துறவி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேரி பில்பென் கூறுகையில், சின்மோய் கிருஷ்ண தாஸின் சிறைவாசம் மற்றும் வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் உலகத் தலைவர்களால் இப்போது கவனிக்கப்பட வேண்டும். மத சுதந்திரத்தையும், உலகளவில் உள்ள அனைத்து விசுவாசிகளின் பாதுகாப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.