போதும், உடனே நிறுத்துங்கள்: பிரான்ஸ் போராட்டக்காரர்களுக்கு பலியான சிறுவனின் பாட்டி வேண்டுகோள்
- நீங்கள் சேதப்படுத்தும் கார்களோ, பள்ளிகளோ, அல்லது பேருந்துகளோ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
- துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிதான் தண்டிக்கப்பட வேண்டியவர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல். எம். 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மேலும் அந்நாட்டு காவல்துறை, சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் எண்ணமும் உருவாகி, அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பலியான சிறுவனனின் பாட்டி நாடியா, வன்முறையில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் தனது பேரனை சாக்காகப் பயன்படுத்துவதாக கூறியதுடன், அமைதியாக இருக்ககும்படி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
இப்போது பொருட்களை உடைக்கும் நபர்களுக்கு நான் சொல்கிறேன்: அதை உடனே நிறுத்துங்கள். நீங்கள் சேதப்படுத்தும் கார்களோ, பள்ளிகளோ, அல்லது பேருந்துகளோ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அவற்றை சேதப்படுத்தாதீர்கள். தாய்மார்கள்தான் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். எனது பேரனின் படுகொலை, எனது வாழ்க்கையையும் எனது மகளின் (நேஹலின் தாயார்) வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்றாலும் காவல்துறையினரை துன்புறுத்துவதை நான் விரும்பவில்லை. நீதி அதன் வழியில் இயங்க வேண்டும். எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிதான் தண்டிக்கப்பட வேண்டியவர். காவல்துறையின் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரிக்காக நிதி சேகரிப்பு பிரச்சாரம் நடந்தது. இதில் சுமார் ரூ.6 கோடி ($731,000) உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, "என் இதயம் வலிக்கிறது" என நாடியா தெரிவித்தார்.
நேற்று முன்தின நிலவரப்படி, 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருக்கின்றனர் என்றும் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் சராசரி வயது 17 என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.