உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.. இலங்கை அரசுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு
- நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
- ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளுக்கு இடையூறு இன்றி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.
இலங்கையில் நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் இலங்கையை ஆளும் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.
எதிர்கட்சிகள், சமூக குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. விசாரணையை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதற்காக இலங்கை அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது.
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது, தாமதப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது.
எனினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதையை ஒதுக்க இலங்கை அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மற்ற தேர்தல் ஏற்பாடுகளை பாதிக்காத அளவுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.