வீசும் கடும் புயலில் விமானமே நகர்ந்த அதிசயம்
- கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
- விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).
கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.
அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.