உலகம்

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு

Published On 2023-04-25 09:41 GMT   |   Update On 2023-04-25 10:37 GMT
  • சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
  • தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

ராணுவ ஆட்சி நடந்து வரும் அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடும் சண்டை நடந்து வருகிறது.

தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்தியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் சூடானில் சிக்கி தவிக்கிறார்கள். தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

ஆபரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணி தொடங்கப்பட்டு சூடானுக்கு கப்பலையும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இரண்டு விமானங்களையும் அனுப்பி உள்ளது. சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள், வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதில் தங்களது விவரங்கள், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர். இதுவரை 84 தமிழர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கி உள்ளதால் தகவல்களை பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முடங்கி போய் இருப்பதால் இந்திய மீட்பு கப்பல் நிறுத்தப்பட்டுள்ள போர்ட் சூடான் துறைமுகத்துக்கு இந்தியர்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அவர்களை துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கான வாகன வசதிகள் இல்லை.

இதனால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து டைல்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு சென்ற 28 பேர் தங்களை மீட்கும்படி வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் 17 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

இதற்கிடையே போர்ட் சூடான் துறைமுகத்துக்கு 500 இந்தியர்கள் வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News