காசாவின் ரபா நகரம் மீது தரைவழித் தாக்குதலுக்கு அனுமதி
- காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
- ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.
மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.
தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.