ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் சரிந்து 6 பேர் பலி
- மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.
- பனிப்பாறைகள் சரிவில் இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.
ரோம்:
ஐரோப்பியாவில் மிகப் பெரிய மலை தொடராக ஆல்ப்ஸ் மலை தொடர் விளங்குகிறது. இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலை தொடர் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ஏற்ற பயிற்சி மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல இந்த மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். சிலர் பனிச்சறுக்கு விளையாடினர்.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிகரத்தின் உச்சியில் இருந்து பனிப்பாறைகள் அப்படியே சரிந்து விழுந்தது.இதில் மலை ஏறிக் கொண்டு இருந்தவர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.
6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பனிப்பாறைக்குள் மாட்டி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பனிப்பாறைகள் சரிவில் இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.
அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.