உலகம்

இலங்கையின் புதிய பிரதமர் யார்? நாளை அறிவிக்கிறார் அதிபர் திசநாயகா

Published On 2024-11-17 03:31 GMT   |   Update On 2024-11-17 03:31 GMT
  • 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
  • நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.

அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

இந்த நிலையில் 225 இடங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மூத்த செய்தி தொடர்பாளர் டில்வின் சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் திங்கட்கிழமை ஒரு மந்திரிசபையை நியமிப்போம். அதன் பலம் 25-க்கும் குறைவாக இருக்கும். பொது செலவை குறைக்க சிறிய அளவிலான மந்திரி சபையை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பரிந்துரைக்கிறது. அதே வேளையில் துணை மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். மந்திரிகளுக்கு துறைகளை ஒதுக்குவதில் அறிவியல்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்" என கூறினார்.

இலங்கை அரசியலமைப்பின் 46-வது பிரிவின்படி, மொத்த கேபினட் மந்திரிகளின் எண்ணிக்கை 30 ஆகவும், துணை மந்திரிகளின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்கும் எனவும், அப்போது அதிபர் திசநாயகா தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 225 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News