உலகம் (World)

பாதுகாப்பு அச்சுறுத்தல் என புகார்- ஆஸ்திரேலிய பாராளுமன்றம் அருகே ரஷிய தூதரகம் கட்ட தடை

Published On 2023-06-15 10:08 GMT   |   Update On 2023-06-15 10:08 GMT
  • பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றம் அருகே ரஷிய தூதரகம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
  • தூதரகம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கான்பெர்ரா:

ஆஸ்திரேலிய பாராளுமன்றம் அருகே ரஷியா தனது புதிய தூதரக கட்டிடத்தை கட்ட முடிவு செய்தது. இதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியதாவது:-

பாராளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய ரஷிய தூதரகம் கட்ட முயற்சிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து அரசு மிகத் தெளிவான பாதுகாப்பு ஆலோசனையை பெற்றுள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட இடம், தூதரகம் அமையும் இடமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரைவாக செயல்படுகிறோம். பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே ரஷியா புதிய தூதரகத்தை கட்டுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் சட்டம், பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஆலோசனையின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தின் மீதான ரஷியாவின் குத்தகையை நிறுத்தும்.

எதிர்க்கட்சிகள் மற்றும் பிற எம்.பி.க்களுக்கு இச்சட்டம் குறித்து நேற்று இரவு விளக்கமளிக்கப்பட்டது. இன்று பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் மூலம் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டன. இந்த முடிவு ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்டதாகும். இதற்கு ஒத்துழைத்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றம் அருகே ரஷிய தூதரகம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூதரகம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News