சீனாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு
- எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.
- 2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது.
பீஜிங்:
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.
2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து அவன் குணம் அடைந்தான். அதன்பின் அதே ஆண்டு மே மாதம் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் பாதிக்கப்பட்டான். அவனுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
இதற்கிடையேதான் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.