திக்கு தெரியாமல் திண்டாடும் காசா மக்கள்- உதவி பொருட்களுடன் எகிப்து தயார் நிலை
- பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
காசா:
இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.
ரபாத் மற்றும் கான்யூனிசில் 3 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஒரே இரவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.
இஸ்ரேலின் உத்தர வின்படி காசா நகரில் இருந்தும், வடக்கு பகுதிகளில் இருந்தும் வெளியேறி குடும்பங்கள் தான் கொல்லப்பட்டனர்.
காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ், ரபா, டெல் அல்பலாஹ் ஆகிய பகுதிகளில் கடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.
பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பினர் கூறும்போது, 'தெற்கு காசாவில் குடிநீர், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாரம் இல்லாததால் மருத்துவ மனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கண் முன்பே மனித பேரழிவு ஏற்படுகிறது' என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பினர் கூறும்போது, 'மொத்தம் 23 லட்சம் மக்கள் கொண்ட காசாவில் தினசரி ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு குறைவான நீர் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் நிறுத்தபட்டதால் பிறந்த குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.