உலகம்

காசா எல்லையில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல்

Published On 2023-10-19 23:00 GMT   |   Update On 2023-10-19 23:00 GMT
  • லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
  • ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

டெல் அவிவ்:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.

தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன.

பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Tags:    

Similar News