உலகம்

தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிறது: காசாவில் இருந்து 4 லட்சம் பேர் வெளியேறினர்

Published On 2023-10-12 07:44 GMT   |   Update On 2023-10-12 07:44 GMT
  • உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர்.
  • தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஜெருசலேம்:

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (வியாழக்கிழமை) 7-வது நாளாக நீடித்தது.

ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே லெபனான் மற்றும் சிரியாவில் இருந்தும் தாக்குதல் தொடங்கி உள்ளது. மும்முனை தாக்குதல் நடந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு இஸ்ரேல் நாடு காசாவில் குண்டு வீச்சுக்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி சிதைந்து உள்ளது.

இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்து உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காசா எல்லையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தங்கள் எல்லையில் ஹமாஸ் படையினர் ஊடுருவிய பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அங்கு தற்போது பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்து வருகிறது.

விரைவில் அங்கிருந்து தரை வழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தரை வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

போர் விரிவடைந்துக் கொண்டே செல்வதால் ஹமாஸ் படையினர் ஆயுத தாக்குதலை கைவிடாமல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன.

Tags:    

Similar News