நேபாள விமான விபத்து: பலியான பெண் விமானி பற்றி உருக்கமான தகவல்
- அஞ்சுவின் கணவர் தீபக் பொக்ரேலும் விமானி ஆவார்.
- விமான விபத்தில் பலியான பெண் துணை விமானி அஞ்சு கதிவாடா பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
காத்மாண்டு:
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொகாரா நகருக்கு சென்ற பயணிகள் விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. சேதி ஆற்றின் கரையில் விமானம் மோதி தீப்பிடித்தது. அந்த விபத்தில் 68 பயணிகள், 4 சிப்பாய்கள் என விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள். இதில் இந்தியர்கள் 5 பேரும் அடங்குவர்.
இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 2 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே விமான விபத்தில் பலியான பெண் துணை விமானி அஞ்சு கதிவாடா பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
அஞ்சுவின் கணவர் தீபக் பொக்ரேலும் விமானி ஆவார். அவர் 2006-ம் ஆண்டு ஜம்பாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். கணவர் இறந்த பிறகு கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தின் மூலம் அஞ்சு கதிவாடா விமானி பயிற்சியில் சேர்ந்தார்.
2010-ம் ஆண்டு நேபாள ஏர்லைன்சி துணை விமானியாக பணியில் சேர்ந்தார். 12 ஆண்டுகள் விமானியாக பணியாற்றி வந்த அஞ்சு, அவரது கணவரை போலவே விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறும்போது, அஞ்சு கதிவாடா 6,400 மணி நேரத்திற்கும் மேலாக விமான பயண நேரத்தை கொண்ட ஒரு விமானி. காத்மாண்டுவில் இருந்து நாட்டின் உச்ச பெரிய நகரமான பொக்காராவுக்கு விமானத்தை இயக்கி வந்தார் என்றனர்.
விமான கேப்டன் கமலின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அஞ்சு கதிவாடாவின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை.