உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Published On 2023-02-20 05:11 GMT   |   Update On 2023-02-20 05:11 GMT
  • தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
  • வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சியோல்:

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின் பேரில் ஐ.சி.பி.எம். வகையை சேர்ந்த ஹவாகாய்-15 என்ற ஏவுகணையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 5,770 கிலோமீட்டர் உயரத்தில் 990 கி.மீட்டர் தொலைவில் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கியது. தனது அணு ஆயுத சோதனைக்கு இது மேலும் வலு சேர்ப்பதாக அமைந்ததாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென் கொரியா கூறி உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 48 மணி நேரங்களில் அடுத்தடுத்து வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News