உலகம்

இலங்கை அதிபருக்கான அதிகாரங்கள் குறைப்பு சட்டத் திருத்தத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

Published On 2022-10-22 09:57 GMT   |   Update On 2022-10-22 09:57 GMT
  • சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
  • 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.

இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News