உலகம்

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Published On 2023-05-23 11:18 GMT   |   Update On 2023-05-23 11:18 GMT
  • சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

சிட்னி:

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

சுரங்கம் மற்றும் கனிமங்கள் புதைபடிவ எரி பொருள் துறை, பசுமை எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் அதிபர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறும்போது, உலகின் தலைசிறந்த முதலீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பிரதமர் மோடி, சிட்னியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை கொண்டாடும் சமுதாய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வர்த்தக மேம்பாடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

முன்னதாக பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் எளிதில் திருப்தி அடையும் நபர் அல்ல. அதே போல்தான் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசை பார்த்திருக்கிறேன். இரு தரப்பு உறவுகளை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக இந்திய புலம்பெயர் மக்கள் உள்ளனர். அவர்களால் இரு தரப்பு உறவுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

உக்ரைனில் நடந்து வரும் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொண்டுள்ளது. நல்ல நண்பர்களாக இருப்பதன் நன்மை என்னவென்றால் நாம் சுதந்திரமாக விவாதிக்கலாம் மற்றும் ஒரு வருக்கொருவர் பார்வையை பாராட்டலாம். இந்தியாவின் நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொள்கிறது. அது (உக்ரைன் போர்) எங்கள் இரு தரப்பு உறவை பாதிக்காது.

வளர்ந்து வரும் இரு நாட்டு உறவுகள், திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக்கை உருவாக்க ஆழமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தும்.

இந்தோ-பசிபிக் பகுதி, காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், தகவல் தொடர்பு பாதுகாப்பு கடற்கொள்ளை போன்ற பல சவால்களை எதிர் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதமர் மோடி நாளை இந்தியா திரும்புகிறார்.

Tags:    

Similar News