உலகம்

அமெரிக்காவில் மருத்துவ கட்டிடத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

Published On 2023-05-04 06:51 GMT   |   Update On 2023-05-04 06:51 GMT
  • மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான்.
  • புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

அட்லாண்டா:

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார்.

அங்குள்ள அட்லாண்டா மேற்கு பீச்ட்ரீ ரோட்டில் ஏராளமான உயரமான கட்டிடங்கள் உள்ளது. சிறந்த வியாபார தலமாகவும் இப்பகுதி விளங்குகிறது.

இந்த பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் யார்? என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது 24 வயது வாலிபர் என தெரியவந்தது. அவன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து இருந்தான். அவனது புகைப் படத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News