உலகம்

ஜெர்மனியில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கத்தி குத்து- வாலிபர் சுட்டுக் கொலை

Published On 2022-09-09 05:49 GMT   |   Update On 2022-09-09 06:59 GMT
  • மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை.
  • வாலிபருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர்.

ஜெர்மனி பலரைன் நகர் அருகே உள்ள அன்ஸ்பக் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த கத்தியால் ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக குத்தினான்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதைபார்த்த மற்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மர்ம வாலிபர் கத்தியால் ஆக்ரோஷத்துடன் கத்திக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதனை பார்த்து அவனை பிடிக்க முயன்றனர்.

அவன் கத்தியால் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பி ஓடினான். உடனே போலீசார் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மர்ம மனிதன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தான்.

மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் யார்? என்று தெரியவில்லை. அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவனுக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News