உலகம் (World)

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய மக்கள் உதவ வேண்டும்- சிரியா தூதரகம் கோரிக்கை

Published On 2023-02-10 11:17 GMT   |   Update On 2023-02-10 11:45 GMT
  • சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
  • இந்தியர்கள் நிதி உதவி செய்வதற்கு வசதியாக வங்கி எண்ணையும் சிரியா தூதரகம் தெரிவித்து இருக்கிறது.

சிரியா:

துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லைப்பகுதிகளை கடந்த 4 நாட்களுக்கு முன்பு உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஏற்கனவே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

இப்போது ஏற்பட்ட பூகம்பம் அவர்களுக்கு மீண்டும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. நில நடுக்கத்தால் உருக்குலைந்து உள்ள சிரியாவை அதில் இருந்து மீட்டெடுக்க இந்திய மக்கள் உதவ வேண்டும் என டெல்லியில் உள்ள சிரியா தூதரகம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிரியா தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிடும் வகையில் மருத்துவ உபகரணங்கள், குளிரை தாங்க கூடிய போர்வைகள் மற்றும் உடைகள், நிவாரண பொருட்கள் போன்றவற்றை இந்தியர்கள் வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியர்கள் நிதி உதவி செய்வதற்கு வசதியாக வங்கி எண்ணையும் சிரியா தூதரகம் தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News