சின்வார் கொலை: இஸ்ரேலுடன் அடுத்தக்கட்ட போருக்கு தயார் - ஹிஸ்புல்லா சூளுரை.. ஈரான் சொல்வது என்ன?
- ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இஸ்ரேல்
தற்போது அதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வார் கட்டிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் டிரோன் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தங்களின் முக்கிய நோக்கம் நிறவெறி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர். 200 பேர் வரை பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் பெருமபலானோர் மீட்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா உள்ளிட்ட பாலஸ்தீனியர்களை நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான்
இதற்கிடையே ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து க்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால் எந்த நேரமும் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.
ஹிஸ்புல்லா
இதற்கிடையே தலைவரின் மறைவால் சற்று தொய்வடைந்த ஹிஸ்புல்லா மீண்டும் தீவிரமாக இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய போர்
மேலும் தற்போது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்தும் ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுக்கு எதிரான புதிய மற்றும் அடுத்த கட்ட போரை நோக்கி தாங்கள் முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தலைவர் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை இஸ்ரேலை எதிர்க்கும் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானும் ஹிஸ்புல்லாவும் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற பதற்றம் உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது. சிவார் கொல்லப்பட்டதை உறுதி செய்யாத ஹமாஸ், தங்கள் அமைப்பை அழைக்க முடியாது என்று மட்டும் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.