உலகம்
null

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

Published On 2023-11-01 06:15 GMT   |   Update On 2023-11-01 06:40 GMT
  • தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
  • இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்காக்:

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டு தோறும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் நடவடிக்கையாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தாய்லாந்து வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிரிட்டன், கத்தார், குவைத், கனடா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News