ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சீனா, ரஷியா- அமெரிக்கா கண்டனம்
- வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின.
- கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள்.
நியூயார்க்:
வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
சமீபத்தில் வடகொரியா 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் வடகொரியாவில் ஏவுகணை சோதனைகள் நடைபெறுவதை கண்டித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் விவாதம் கொண்டு வரப்பட்டது.
இதில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ரஷியா, சீனா ஆகியோரை தவிர 13 உறுப்பினர்கள் வடகொரிய ராணுவம் உளவு செயற்கை கோளை ஏவுவதற்கு கண்டனம் தெரிவித்தன.
ஆனால் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்டு கூறும்போது, "வடகொரியா விவகாரம் எங்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆனால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீனா, ரஷியாவின் இடையூறுகளால் இந்த கவுன்சில் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வடகொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான தங்கள் பொறுப்பை ரஷியாவும், சீனாவும் ஏற்கவில்லை.
கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுகிறார்கள். கவுன்சில் நடவடிக்கைகளை தொடர்ந்து தடுக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்கும் தீர்மானத்தை சீனாவும், ரஷியாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.