உலகம்
null

பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் பேச்சு

Published On 2023-10-30 06:26 GMT   |   Update On 2023-10-30 06:34 GMT
  • போரில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.
  • பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது.

வாஷிங்டன்:

காசா மீது நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதனை நிராகரித்த இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது ஜோபைடன் அவரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மனிதாபிமான உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அங்குள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டோரியோ குட்டரெஸ் நேபாளத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் இறந்த 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது.

மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் காசாவில் உள்ள மக்களுக்கு உதவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News