ஐ.நா. மாநாட்டில் கைலாசா சார்பில் பங்கேற்று பேசிய அமெரிக்க பெண்- புதிய தகவல்கள்
- கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
- புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.
ஜெனிவா:
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதே நேரம் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
அந்த புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாசாவில் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியான சில புகைப்படங்கள் கைலாசா பற்றிய பரபரப்பை அதிகரித்து உள்ளது. அதில் ஜெனிவாவில் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜய பிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.
இந்த மாநாட்டில் விஜய பிரியா பேசும் போது, எங்களது பரமகுருவான நித்யானந்தா மற்றும் கைலாசாவில் வசிக்கும் 20 லட்சம் இந்து மக்கள் மீதான அடக்குமுறையை தடுக்க சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பேசி உள்ளார்.
விஜய பிரியாவுடன் கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர் முக்திகா ஆனந்த், செயின்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், இங்கிலாந்தின் கைலாசா சபை தலைவர் நித்யா ஆத்ம தாயி, பிரான்சின் தலைவர் நித்யா வெங்கடேசனந்தா ஆகிய 5 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்று பேசிய கைலாசா பிரதிநிதி விஜய பிரியா பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனில் அவருக்கு வீடு இருப்பதாக கைலாசாவில் இணைய தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் விஜய பிரியா ஐ.நா.வுக்கான கைலாசா நாட்டின் நிரந்தர தூததராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிரதிநிதிகளுடன் சில ஒப்பந்தங்களில் விஜய பிரியா கையெழுத்திடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
கைலாசா நாட்டில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பல நாடுகளில் திறந்துள்ளதாக விஜய பிரியா கூறியுள்ளார்.