தீவிரவாத தாக்குதல் நடத்த சதி.. டெய்லர் ஸ்விப்ட் நிகழ்ச்சி ரத்து
- டெய்லர் ஸ்விப்ட் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
- டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட். இவரது பாடல்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.
அந்த வகையில், டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவரது இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்களது வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றனர்.