அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் கைது
- ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார்.
- விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அமெரிக்காவுக்குள் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைய பலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்க எல்லைகளில் அமெரிக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பபலோ நகரில் உள்ள சர்வதேச ரெயில் பாலத்தில் ஓடும் சரக்கு ரெயிலில் இருந்து குதித்த ஒரு பெண் உள்பட 4 பேரை அமெரிக்க எல்லை காவல் படையினர் பிடித்தனர். ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் எந்த குடியுரிமை ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவர்கள் அமெரிக்காவிற்குள் ஆவணங்கள் இன்றி நுழைய முயன்றதும் தெரிய வந்தது.