உலகம்

ரஃபா நகர் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-05-25 01:05 GMT   |   Update On 2024-05-25 01:05 GMT
  • காசாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டதாக அறிவிக்க தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
  • ரஃபா மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனப்படுகொலை நடைபெறவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது.

தற்போது பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிக அளவில் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ரஃபா மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் இந்த உத்தரவை பின்பற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றால், உலக நாடுகளால் தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும்.

ஆனால் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அதாவது போர் நிறுத்தத்தை நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.

சமீபத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News