"ஏமாற்று பேர்வழி" - விவேக் குறித்து டிரம்ப் விமர்சனம்
- "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" முழக்கத்தை டிரம்ப் முன்னெடுத்துள்ளார்
- "விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு எதிரணிக்கு அளிக்கும் வாக்கு" என்றார் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக போட்டியிடுகிறார்.
2016 தேர்தலில் "மாகா" எனப்படும் (Make America Great Again) "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" எனும் முழக்கத்தை முன்னெடுத்து பெரும் வெற்றி கண்ட டிரம்ப், 2026 தேர்தலிலும் அதையே தன் பிரசாரங்களில் முன் வைக்கிறார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அவர் அதிபராவது கேள்விக்குறியாக உள்ளது.
குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு வேட்பாளரான தொழிலதிபர் விவேக் ராமசாமி, தனக்கு தீவிரமாக ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகிறார்.
தனது பிரசாரங்களில் விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பை புகழ்வதுடன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை விமர்சித்து "டிரம்ப் குற்றமற்றவர்" என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இன்று டொனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" (Truth Social) கணக்கில் விவேக் ராமசாமியை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதில், "விவேக் என் ஆதரவாளரை போல் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால், தற்போது பிரசார யுக்திகளில் ஆதரவை தந்திரமாக மறைத்து விடுகிறார். நீங்கள் விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு, எதிரணிக்கு அளிக்கும் வாக்காகும். அவர் பேச்சில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். "மாகா" கனவை நனவாக்க விவேக் ஏற்றவர் அல்ல" என பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் விவேக் ராமசாமி எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நான் டிரம்பின் பதிவை கண்டேன். அவரது தேர்தல் பிரசார ஆலோசகர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அவருக்கு அளித்துள்ளனர். 21-வது நூற்றாண்டின் சிறந்த அதிபர் டிரம்ப்தான். என்னை அவர் விமர்சித்ததற்காக நான் அவரை தவறாக விமர்சிக்க போவதில்லை. ஆனால், தற்போது நாட்டில் உள்ள சூழல், அவரை அதிபராக அனுமதிக்காது என என்னை போல் பலர் நம் நாட்டில் நம்புகின்றனர். நாட்டிற்காகவும், டிரம்பிற்காகவும் நான் கவலைப்படுகிறேன். நான் அவர் ஆதரவாளன்.
இவ்வாறு விவேக் பதிவிட்டுள்ளார்.