புத்தகங்களை பாதுகாக்க நவீன 'ஃபிரிட்ஜ்' ஏற்பாடு
- ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம்.
- கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.
அபுதாபி:
அபுதாபி ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் கலாசார அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த வளாகத்தில் அமீரக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள அல் ஜாமி நூலகத்தில் விலைமதிப்பில்லா லட்சக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க புத்தகங்களை நீண்ட நாட்கள் சேதமடையாமல் பாதுகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் புத்தகங்களை பாதுகாக்க நவீன 'ஃபிரிட்ஜ்' (குளிர்சாதன பெட்டி) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டி என்பது வெப்பநிலையை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவை பாதுகாக்க பயன்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதுபோன்ற அமைப்புள்ள நவீன 'ஃபிரிட்ஜ்' தற்போது ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் நூலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது புக் ஸ்டெரிலைசர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இதன் உள்ளே புத்தகங்கள் வைக்கப்படும்போது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், தூசு மற்றும் அசுத்தங்கள் நீக்கப்படுகிறது. இதன் மூலம் பூஞ்சைகள், பூச்சிகள் அரிக்காமல் நீண்ட நாட்கள் புத்தகங்களை அப்படியே பராமரிக்க முடியும். இதன் உள்ளே காற்றாடி அமைப்பு அனைத்து பக்கங்களையும் புரட்டுகிறது. இதில் புற ஊதா கதிர்களை பாய்ச்சும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் புத்தகம் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம். விரைவாக வேண்டுமென்றால் 30 வினாடிகளில் சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது. இதன் செயல்பாடுகளை சிறிய கண்ணாடி மூலம் வெளியில் இருந்து காணமுடியும். இந்த சாதனம் தற்போது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.