வங்காளதேச நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கிறோம்-இந்திய அரசு தகவல்
- இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
- ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடமைகள், கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் பேரணி நடந்தது. இதில் லட்சகணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் இந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறும்போது, `வங்காள தேசத்தில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள அரசாங்கத்துடனும் பேசுகிறோம்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை கேட்கிறோம். இந்த அவமானமும், இனப் படுகொலையும் நிறுத்தப் பட்டு, அனைத்து கோவில்களும் பாரம்பரியமாக பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்தன.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உபைதுல் ஹாசன் பதவி விலக கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோாட்டின் தலைமை நீதிபதியாக சையத் ரெபாத் அகமது என்பவரை அதிபர் முகமது ஷஹாபுதீன் நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கோபால்கஞ்சில் அவாமி லீக் கட்சி பேரணியில் நடந்த மோதலின் போது 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.