போர் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
- லெபனான் எல்லை மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களுடைய வீட்டிற்கு திரும்ப வைப்பது இலக்கு- இஸ்ரேல்.
- காசா மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது லெபனான் எல்லையை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப்பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் ஹிஸ்வுல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திரும்ப வைப்பது போரின் இலக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஹிஸ்புல்லாவின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இது ஹிஸ்புல்லாவின் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என கருதப்படுகிறது. இதற்கு காரணம் இஸ்ரேல்தான் என குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியின் மோதலின் மையம் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் கூறுகையில் "படைகள் வடக்கு எல்லை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. போர் தற்போது புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. போரின் மையம் தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நாங்கள் வடக்கு பகுதிக்கு படைகள், வளங்கள் மற்றும் ஆற்றலை ஒதுக்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"நான் முன்னரே கூறியிருந்தேன், நாங்கள் வடக்கில் உள்ள குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திரும்பச் செய்வோம். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம்" என பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.