"இஸ்ரேல் வெல்ல வேண்டும்" - இங்கிலாந்து தூதர் திட்டவட்டம்
- ரஷிய விமான நிலைய சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- ஹமாஸ் கட்டுப்பாட்டில் காசா இருக்க கூடாது என்றார் வால்டர்ஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 23-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் டஜெஸ்டான் (Dagestan) பகுதியில் உள்ள விமான நிலையத்தில், இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கி கொண்டிருந்த பயணிகளில் யூதர்களை தேடி சென்ற ஒரு கும்பல், அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியது. பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்த்து பயணிகளில் யூதர்கள் உள்ளனரா என அந்த கும்பல் தேடிய வீடியோ காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ரஷியாவில் உள்ள தன் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த ரஷியாவை இஸ்ரேல் கோரியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான இங்கிலாந்தின் தூதர் சைமன் வால்டர்ஸ் (Simon Walters), ராணுவ வானொலிக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காசா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸை இஸ்ரேல் வெல்ல வேண்டும். ஆனால், இஸ்ரேல் போரில் கடைபிடிக்க வேண்டிய மரபுகளை மீறக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது கவலை அளிக்க கூடிய விஷயம். யூத-எதிர்ப்பு குறித்து இங்கிலாந்து மிகவும் வருந்துகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், போரை நிறுத்த கோரியும் நடக்கும் போராட்டங்களில் யூதர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டது நல்லதல்ல. இங்கிலாந்தில் உள்ள யூதர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இங்கிலாந்து தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.