உலகம்

பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் இம்ரான் கானுக்கு 10-வருட சிறை தண்டனை

Published On 2024-01-30 08:57 GMT   |   Update On 2024-01-30 08:57 GMT
  • தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக ஒரு பேரணியில் இம்ரான் கூறினார்
  • ராவல்பிண்டி நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது

2018 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவி ஏற்றார்.

2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

அந்த ரகசிய செய்தி குறிப்பு "சைஃபர்" என அழைக்கப்படுகிறது.

ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது புகார் எழுந்தது.

மேலும், அரசாங்க ரகசியத்தை காக்க தவறிய குற்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

"சைபர் வழக்கு" (cipher case) என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

ஆனாலும், பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News