அதிநவீன சொகுசு படகை சேதப்படுத்திய சுற்றுச்சூழல் ஆர்பாட்டக்காரர்கள்
- 361 நீளமுள்ள சொகுசு படகு 45 பணியாளர்களுடன் சக வசதிகளும் உள்ளன
- சொகுசு கப்பலின் விலை சுமார் 2500 கோடி ரூபாய் ஆகும்
அர்கான்ஸாஸ் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு உலகெங்கும் பல சூப்பர் மார்கெட் கடைகளை நடத்தி வரும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனம் வால்மார்ட். இதனை தொடங்கி வெற்றிகரமாக உருவாக்கிய சாம் வால்டனின் சகோதரர் பட் வால்டனின் மகள் நான்ஸி வால்டன் லாரி.
வால்மார்ட் சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பதில் பங்கு வகித்து வரும் இவரின் நிகர மதிப்பு சுமார் ரூ.72 ஆயிரம் கோடி ($8.7 பில்லியன்) ஆகும். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் 300 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சொந்தமான சுமார் ரூ.2500 கோடி ($300 மில்லியன்) மதிப்புள்ள ஒரு அதிநவீன சொகுசு படகு ஸ்பெயினின் இபிசா கடற்கரை பகுதியில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தீயணைக்கும் கருவிகளில் கருப்பு-சிகப்பு பெயிண்டை ஊற்றி அதனை கொண்டு அப்படகின் பின்பகுதி முழுவதும் கொட்டி சேதப்படுத்தினர்.
இச்செயலில் ஈடுபட்ட பிறகு, ஃப்யூச்சூரோ வெஜிட்டல் (Futuro Vegetal) எனப்படும் ஒரு சுற்றுப்புற சூழல் அமைப்பை சேர்ந்த இரண்டு ஆர்பாட்டக்காரர்கள், "நீங்கள் அனுபவிக்கிறீர்கள் ஆனால் பிறர் துன்பப்படுகிறார்கள்" என எழுதப்பட்ட பதாகைகளை காட்டி அதனை புகைப்படமாக தங்கள் டுவிட்டர் கணக்கிலும் பதிவிட்டனர்.
இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
"ஒரு சிறு அளவிலான பெரும்பணக்கார வகுப்பினருக்கு சொகுசு வாழ்க்கை கிடைப்பதற்காக சமூகத்திலும் சுற்றச்சூழலிலும் வீழ்ச்சிக்கு வழி செய்யும் பொருளாதார வழிமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். மிகப்பெரும் பணக்காரர்கள் பிறரின் துன்பத்தில் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்," என இந்த நிகழ்ச்சியை குறித்து ஃப்யூச்சூரோ வெஜிட்டல் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது.
காவோஸ் எனப்படும் லாரி வால்டனின் இந்த அதிநவீன சொகுசு படகு 361 அடி நீளமுள்ளது. இதில் 4 தளங்கள் உள்ளன. இதில் 45 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுடன் 31 விருந்தினர்களை உபசரிக்க தேவையான அனைத்து வசதிகளும் இந்த படகில் உள்ளது. மேலும் அதில் பெரிய சினிமா அறை, ஸ்பா, ஜிம், மருத்துவமனை உட்பட இன்னும் பல வசதிகள் உள்ளன.
இந்த அசம்பாவிதம் குறித்து லாரி வால்டன் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.