செய்திகள்
அதிகாலையிலேயே பக்தர்கள் வந்து சமூக விலகலை கடைப்பிடித்து அமர்ந்திருந்த காட்சி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி

Published On 2020-06-11 03:44 GMT   |   Update On 2020-06-11 03:45 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8-ந்தேதி 6 ஆயிரத்து 300 பேரும், 9-ந்தேதி 8 ஆயிரத்து 350 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும், திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பட்டனர். அவர்களுக்கு நேற்று காலை 9 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் 8 கவுண்ட்டர்களிலும், சீனிவாசம் தங்கும் விடுதியில் 6 கவுண்ட்டர்களிலும், அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் 4 கவுண்ட்டர்களிலும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்பட்டது. 9-ந்தேதி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று கல்யாண கட்டாக்களில் 483 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

இன்று (வியாழக்கிழமை) பொது தரிசனத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 3 ஆயிரம் பக்தர்கள் டைம் ஸ்லாட் மூலமும், 3 ஆயிரம் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மூலமாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் ஆன்லைனில் முன்பதிவு செய்து 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 8-ந்தேதியில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் 56 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 300 ரூபாய் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கூடுதலாக டைம் ஸ்லாட் டோக்கன் வழங்க திருப்பதியில் கூடுதல் கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.26 ஆயிரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Similar News