புதுச்சேரி

பெண் குழந்தைகளுக்கு வைப்பு தொகை, கியாஸ் சிலிண்டருக்கு மானியம் உள்பட 4 புதிய திட்டங்கள் இன்று தொடக்கம்

Published On 2023-07-31 04:33 GMT   |   Update On 2023-07-31 05:45 GMT
  • பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.
  • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 வழங்க முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் முதலமைச்சரின் விபத்து காப்பீடு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

புதுவை சமூக நலத்துறையின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் முதலமைச்சரின் விபத்து காப்பீட்டு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய திட்டம் என 4 திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 4 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடக்கிறது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.

Tags:    

Similar News