null
2023 WWDC நிகழ்வில் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
- 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது.
- WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சுவாரஸ்யம் நிறைந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.
அதன்படி 2023 WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) சார்ந்த அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. இது ஆப்பிள் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் அறிவிப்பாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த தகவல்களை மிக ரகசியமாக WWDC வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளது. 2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஏ.ஆர். பற்றிய தகவலை சூசகமாக தெரிவித்தது. அப்போது முதல் இவ்வாறு சூசகமாக தெரிவிப்பதை ஆப்பிள் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான சூசக தகவலை காண, ஆப்பிள் ஈவன்ட்ஸ் (Apple Events) வலைப்பக்கத்தினை ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தில் திறக்க வேண்டும். அங்கு ஆப்பிள் மார்ஃபிங் லோகோவை தட்டினாலே ஏ.ஆர். பற்றிய தகவலை பார்க்க முடியும். இதில் ஆப்பிள் மார்ஃபிங் லோகோ, ஜூன் 5, 2023 தேதி உள்ளிட்ட தகவல்கள் அழகாக கண் முன் வந்து செல்கிறது.
பயனர்கள் ஆப்பிள் லோகோவினை, அவர்கள் விரும்பும் வகையில் சுழற்றவும், திரையில் மென்மையாக கிள்ளி அதனை இழுக்கவும், சுருக்கவும் முடியும். இதுதவிர ஏ.ஆர். லோகோவை கிரே நிற பேக்கிரவுண்டில் அழகாக சுழல்வது போன்று பார்க்கலாம்.