கணினி

கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் பல்டி.. ஆப்பிள், டெல் ஹேப்பி..!

Published On 2023-08-05 08:32 GMT   |   Update On 2023-08-05 08:32 GMT
  • இந்தியாவில் கணினி இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
  • நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டும்.

லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் லேப்டாப் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என கடந்த வியாழன் கிழமை அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த அறிவிப்புக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் தற்போதுள்ள சாதனங்களை அக்டோபர் 31-ம் தேதி வரை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

 

கணினி சார்ந்த சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சந்தையை சார்ந்து கட்டுப்பாடுகளை மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

சர்வதேச சந்தையில் கணினி துறையில் முன்னணியில் விளங்கி வரும் ஆப்பிள், டெல் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. இதுதவிர உற்பத்தியில் சீனாவுடனான போட்டியை எதிர்கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News