ஒரே வாரத்தில் இந்தியா வரும் ஜியோபுக் 2nd Gen மாடல்.. விலை எவ்வளவு தெரியுமா?
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
- அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.
புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.