டென்னிஸ்

ஜோகோவிச் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாடுவார்- பயிற்சியாளர் தகவல்

Published On 2023-09-13 05:16 GMT   |   Update On 2023-09-13 05:16 GMT
  • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார்.
  • விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

நியூயார்க்:

உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஓபனை கைப்பற்றி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விம்பிள்டனை தவிர மற்ற மூன்றிலும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்.

இந்த நிலையில் அவரது எதிர்கால திட்டம் குறித்து அவரது பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச் அளித்தபேட்டியில், '24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் சாதனை உண்மையிலேயே வியப்புக்குரியது. அவர் தொடர்ந்து சாதிக்கும் வேட்கையில் இருக்கிறார். இன்னும் சாதனைகளை உடைக்கிறார். நம்ப முடியாத ஒரு டென்னிசை விளையாடிக்கொண்டு இருக்கிறார். விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். நான் டென்னிஸ் குறித்து மட்டும் பேசவில்லை. பொதுவாக எல்லா விளையாட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன். அவர் ஒரு வின்னர். தனக்கு தானே உத்வேகம் அளிப்பதில் ஜோகோவிச்சும் ஒருவர்.

25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதும் அவர் ஓய்வு பெறுவாரா? என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே அவரது திட்டம்' என்றார்.

Tags:    

Similar News