பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்ற நடால்- முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி
- ‘களிமண் தரையின் ராஜா’ என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர்.
- 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடாலை (ஸ்பெயின்) சந்தித்தார். காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நடால் தற்போது உலக தரவரிசையில் 275-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள அவருக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு ஆட்டமாக இது அமைந்தது.
'களிமண் தரையின் ராஜா' என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர். ஆனால் இந்த முறை அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லை. ஓரளவு ஈடுகொடுத்து ஆடினாலும் நேர் செட் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 3 மணி 5 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.
நடாலின் ஆட்டத்தை நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோரில் நேரில் கண்டுகளித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் எபாங்சை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் அவர் உள்ளூர் நாயகன் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எதிர்கொள்கிறார். இதே போல் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (9-7), 6-4, 6-1 என்ற செட்டில் மார்டோன் புசோவிக்சை (ஹங்கேரி) சாய்த்தார்.
இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான 95-ம் நிலை வீரரான சுமித் நாகலின் சவால் முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. அவரை கரென் கச்சனோவ் (ரஷியா) 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.