டென்னிஸ்

இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவம் - சானியா மிர்சா உருக்கம்

Published On 2023-03-05 23:00 GMT   |   Update On 2023-03-05 23:00 GMT
  • ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா ஆடினார்.
  • கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

ஐதராபாத்:

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

இந்நிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.

தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார். அப்போது சானியா மிர்சா உருக்கமுடன் பேசியதாவது:

2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவமாகும்.

இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன். எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது. இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன்.

தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News