அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், கவூப் 3-வது சுற்றுக்கு தகுதி: ஷகாரி அதிர்ச்சி தோல்வி
- முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
- 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
நியூயார்க்:
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.