டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
- 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
- அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.