கடந்த முறையை விட 11 சதவீதம் அதிகரிப்பு- விம்பிள்டன் பரிசுத்தொகை ரூ.464 கோடியாக அதிகரிப்பு
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
- 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) இந்த 2 பட்டத்தையும் கைப்பற்றினார்.
பெண்கள் ஒன்றையர் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஸ்வியாடோக் (போலாந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றனர்.
3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 லட்சம் பெறவார்கள். 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.