search icon
என் மலர்tooltip icon
    • 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது
    • பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அப்போது பேசிய அவர், "தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரும்பு தாதுவை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தான் தொடங்கி உள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

    தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.

    இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

    • விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.
    • அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.

    இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன் தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்று் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.
    • ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.

    சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.

    இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.
    • தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில் நகரமாக உள்ளது. இங்குள்ள வரதராஜ பெருமாள்கோவில், காமாட்சி அம்மன்கோவில் சங்கர மடம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்குள்ள பட்டுச்சேலைகளும் தின சிறப்பு வாய்ந்தது. இதனால் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மறைந்த முன்னால் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லமும் இங்கு உள்ளது.

    இத்தனை சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தில் போதிய வசதிகளுடன் பஸ்நிலையம் என்ற குறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக நிலவி வருகிறது. தற்போது காஞ்சீபுரத்தின் மையப்பகுதியான காமராஜ் சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் நிலையம், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த போக்குவரத்து மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் கட்டப்பட்டது. தற்போது தினமும் 350 பஸ்கள் இங்கிருந்து திருப்பதி, சித்தூர், பெங்களூர்,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகள் தொழிற்சாலைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளன. மேலும் மக்கள்தொகை பெருக்கமும் அதிகரித்து உள்ளது. தற்போது காஞ்சீபுரம் மாநராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பஸ்நிலையம் மட்டும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களும் நகரத்தின் மையபகுதிக்கு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே சுமார் 19 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 38 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. பஸ்நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து பணிமனையும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகர மக்களின் 25 ஆண்டு கனவு விரைவில் நிறைவேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, காஞ்சிபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் தடைப்பட்டு வந்தன. தற்போது தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே விரைவில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அழிப்பது நியாயமே இல்லை என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
    • எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

    அதே சமயம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி குறித்து அஷ்வின் தனது யூடியூப் சானலில் நேரலையில் பிரபல கிரிக்கெட் வல்லுநர் Pdogg என்று அழைக்கப்படும் பிரசன்ன அகோரம் உடன் உரையாற்றினார்.

    அப்போது நேரலையில் ரசிகர் ஒருவர் "Pdogg தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று அஷ்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த அஷ்வின், "டேய் உன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை எடுக்கவில்லையா? என கேட்க Pdogg இல்லை என்று சைகை காட்டுகிறார். உடனே அஷ்வின் இல்ல எனக்கு புரியல என்று கேட்க, அதற்கு Pdogg ஹானஸ்ட் ராஜ் என்று எப்படி என்னை எல்லாரும் கூப்பிடுவார்கள் நியாயமா இருந்தா தானே கூப்பிடுவாங்க என்று சொல்ல, அதற்கு அஷ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் கில் 58 ஆவரேஜ் வைத்துள்ளான். சும்மா பாப்புலர் கருத்துன்னு உன்னோட அணியில் இருந்து அவனை எடுத்துவிட்டியா?" என்று பேசியுள்ளார். 

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும்.
    • தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது.

    வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும், ஒரு நல்ல குறிக்கோளுடன், ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கவும் முயல்வதே நிலையான நிம்மதிக்கான வழி.

    இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்ந்த ஆதிமனிதன், வீடு, வாசல், சொத்து, பணம், காசு என எதுவுமின்றி கவலையில்லாமல் வாழ்ந்தான். கூட்டுக் குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் சோதனைகளை நேருக்குநேர் எதிர்கொண்டவர்கள்.

    இயற்கையை பஞ்ச பூதங்களென பகுத்துவைத்து தங்கள் ஐம்புலன்களின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து சாதனை புரிய கற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள்!

    ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை என்றெல்லாம் சிந்தித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்.

    வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உணர்ச்சி, அறிவு என்னும் இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை. இது எல்லாக் காலத்தும் பொருந்தும்.

    சங்க காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை மனிதர்களின் மனம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் மன நிலையிலும் பல்வேறு வேறுபாடுகளும், மாற்றங்களும் நிரந்தரம் என்பதும் உண்மை.

    முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதான் என்பதற்கான ஆதாரங்களாக வரலாற்று சம்பவங்களும் இருக்கின்றன.

    நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும். இந்த நல்லிணக்கம் என்பது இனம் சார்ந்து, உறவு சார்ந்து, நாடு சார்ந்து மட்டுமே வருவதில்லை. இவை அனைத்தையும் கடந்து காதல் என்ற ஒன்று தலைகாட்ட ஆரம்பிக்கும்போது அது எத்தகையத் தடைகளையும் உடைத்துக்கொண்டு நல்லிணக்கத்தையும், தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்கும் உத்தரவாதமாகிவிடுகிறது. இயற்கையே இதற்கு முற்றிலுமாக துணையாக நிற்கின்றது.

    அத்தகைய சக்தி வாய்ந்த காதல் ஒரு நாட்டையே உருவாக்குவதோடு, இந்த உலகிற்கே ஒரு முன்னுதாரணமாகி விடுவதும் கண்கூடு. இது இன்று நேற்று அல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இந்த புதினமே ஆதாரம்.

    வரலாறு பேசும் இந்த காதல் கதை உலகில் பலரும் ஆவலுடன் அலசி ஆராயும் ஒரு ஆவணமாகிக் கொண்டிருக்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 48-ல், ஒரு 16 வயது இளம்பெண், அகண்ட தமிழகத்திலிருந்து தம் காதலனைத் தேடி கடல் கடந்து வெகு தொலைவு, கயா எனும் கொரிய நாட்டிற்குச் சென்றாள். 157 வயது வரை வாழ்ந்து அந்த நாட்டையே பொருளாதாரத்தில் மிக உயர்வான நிலைக்கு இட்டுச் சென்றதோடு தாம் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய நன்றியை அதிகமாகவேச் செலுத்தியுள்ளார் செம்பவளம் என்ற அந்தப் பெண்.

    எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றை திரை போட்டு மறைக்கவோ அல்லது முற்றிலும் அழிக்கவோ முடியாது. அதற்கான ஆதாரம்தான் இன்று புற்றீசல் போல கிளம்பியிருக்கும் இந்த வரலாற்று ஆதாரங்கள். இந்த வரலாறு சார்ந்து ஏற்கனவே ஒரு சில நூல்கள் எழுதியுள்ள நிலையில் இதையே ஒரு புதினம் வடிவில் எழுதி மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

    ஆரம்ப கால கடல் வணிகத்திற்கு முக்கியம் வாய்ந்த, சுவையான திருப்பங்கள் நிறைந்த இந்த வரலாற்று புதினம் உறுதியாக அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    எல்லாம் காதலுக்காக

    கதாநாயகிகளும் கதாநாயகர்களும்

    தலைவர்களும் தலைவிகளும்!

    உன் தலை சாய்ந்திருந்ததோ

    இயற்கையின் மடியில்,

    விழித்தெழு நாட்டை ஆள்வதற்கான

    இனிமையான ஈர்ப்புச் சக்தியோடு..

    சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே தங்கி விவசாயம் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நதிக்கரைகளில் தங்கிவிட்டன. அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்கு தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினார்கள்.

    கற்காலத்தின் முடிவில் மனித நாகரிகம் அடுத்தக் கட்டமாக உலோகக் கால நாகரிகத்தில் (Iron Age Civilization) அடியெடுத்து வைத்த ஆதி மனிதர்கள் நாகரிக மனிதர்களாக பிரகாசமடைகிறார்கள்.

    கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் கற்களால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் பின் நேரடியாக இரும்புக் காலத்திற்கு வந்தவர்கள் அகண்ட தமிழகத்தின் நாயகர்கள். ஆனால் உலகின் ஏனைய மக்கள் பொற்காலம், செம்புக்காலம் என்று கடந்தபின்னரே இரும்புக்கால நாகரிகத்தில் நுழைந்ததையும் வரலாறு விளக்குகின்றது. இதையே, கி.மு. 10,000- – கி.மு. 4,000 வரையான புதிய கற்காலம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

    அந்த வகையில் அகண்ட தமிழகத்தின் வாழ்வியலில் இரும்பு என்ற ஒரு உலோகம் அறிமுகமாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திய ஒரு காலம் என்றால் அது கி.மு. 500 என்ற அளவில் இருக்கலாம் என்பதை நம் தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. சங்க இலக்கியங்களின் உறுதுணை இதற்கு வளமான சான்றாகி நிற்கின்றன.

    இரும்பைக் கண்டறிந்த ஆதி தமிழர்கள் அதனை வைத்து உலைக்களம் அமைத்து கருவிகளும், ஆயுதங்களும் செய்யும் கலையைக் கற்றனர். தொழில் வளம் பெருக ஆரம்பித்தவுடன் வெளி நாட்டவர்களின் கவனமும் பெற்றனர். அவற்றில் பண்டைய ரோம், எகிப்தியம் நாடுகள் கவர்ந்தி ழுக்கப்பட்டதன் முடிவாக இரும்பும், எக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் பெறுகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயருகிறது. பண்டமாற்று முறையில் பல்வேறு பொருட்களையும் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதற்கு தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களே சான்றாதாரங்கள்.

    இரும்பைத் தொடர்ந்து பொன், மணிக்கற்கள், வைடூரியங்கள் என இயற்கை வளங்களிலும் திளைத்திருந்திருக்கிறோம் என்பதையும் அறிய முடிகின்றது.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அகண்ட தமிழகத்தின் ஆய் நாட்டின் வணிகர்கள் சூதுபவள வணிகத்துக்கான கடல் பாதையைத் தென்கொரியாவின் கயா நாடு வரை விரிவுபடுத்தினர்.

    தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலைப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும், மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. அகத்திய முனிவர் வாழ்ந்த, அந்தப் பொதிகை மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சி செய்த மலை.

     

    பவளசங்கரி, 63743 81820

    பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் புகுத்தப்பட்ட இரும்பின் தொழில்நுட்பம் மனித வளர்ச்சியின் முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரியாவின் இரும்புக் கனிமத்தைக் கொண்டு கொரியர்கள் இரும்பை உருவாக்கவும் இரும்புக் கருவிகள் செய்யவும் தேவையான திறனையும் வல்லமையையும் தமிழகத்தை சேர்ந்த ஆய்கொங்கு வணிகர்கள் கயாவில் உருவாக்கினர்.

    நேர்மையும் அறநெறி பிறழாக் கொள்கையும் கொண்ட குறுநில இளவரசனைத் தேர்வு செய்து அரசனாக்கி அவர்களின் இளவரசியை அம்மன்னனுக்கு மணமுடித்து ஒரு புதிய அரசாட்சி அமைய உதவினர்.

    ஆதிக்குடிகளாக வாழ்ந்த பல்வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்தி ஒரு சிற்றரசை உருவாக்கினர். தங்களின் வாழ்வியலையும் தமிழ் புத்த சிந்தனையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அந்த வகையில் கயா எனும் அந்நாட்டில் கிடைத்த இரும்புக் கனிமத்தை இரும்பாக்கும் செயல்முறையைக் கற்றுக் கொடுத்து ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழ் புத்தம் கயா நாட்டின் முதல் அரசியால் போற்றி வளர்க்கப்பட்டு கயா ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஒப்பற்ற சமுதாயமாக உருவாகி அந்த அரசியின் ஆட்சி கொரியாவை முற்போக்குச் சிந்தனை மிக்க நாடாக மாற்றியது.

    பொற்கால ஆட்சி நடந்த கயாவின் வாழ்வியல் தென்கொரியாவில் இருந்த பல குறுநில அரசுகளுக்கும் பரவியது. சில்லாவின் படையெடுப்பு, பிற நாடுகளின் ஆதிக்கம் அழுத்தம் உலகப் போரின் தாக்கம் எனப் பல்வேறு காரணங்களால் ஏழ்மையில் சிக்கித் தவித்த அந்நாடு மீண்டும் சிலிர்த்தெழுந்து செல்வ வளம் கொழிக்கும் நாடாக மாறிய நிலையில் தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்கான முதல் வித்தை விதைத்தவர் அயலகத்திலிருந்து வந்த ஒரு பெண் என்று பெருமையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒருகாலத்தில் பன்னாட்டுக் கடல் வணிகத்தில் தடம் பதித்துத் தங்கள் முத்திரையை பதித்துப் பிற்காலத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு முன்னேற்றப் பாதையில் பயணிக்க ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக இந்த இளவரசியின் வரலாறு விளங்கும் என்பது திண்ணம்..!

    (தொடரும்)

    • சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
    • பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஓன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு சுமார் 121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெறும் திட்டம் 1983-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திரா மாநிலம் வழங்க வேண்டும்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் 450 கனஅடி தண்ணீரும் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் வீணாக வெளியேறி வருகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரி தொடர்ந்து 5 வது ஆண்டாக இதுவரை இல்லாத வகையில் முழு கொள்ளவை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முந்தைய ஆண்டுகளில் பருவமழை குறைவு காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது மற்றும் போதுமான அளவு கிருஷ்ணா தண்ணீரை பெற முடியாததால் பூண்டி ஏரி தொடர்ந்து முழுவதும் நிரம்பாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழை மற்றும் கிருஷ்ணா நீரை பெறுவதால் ஏரியின் நீர் மட்டம் முழுகொள்ளவை எட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது இதுவரை இல்லாத சாதனையாக உள்ளது.

    தற்போது போதுமான அளவு பூண்டி ஏரியில் தண்ணீர் உள்ள நிலையில் கிருஷ்ணா தண்ணீரை பெற்றால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இப்போதைக்கு கிருஷ்ணா நீரை திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது. இதனால் சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

    அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி

    சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சார்பில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதன் காரணமாக கருத்து கேட்பு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

    கருத்துக்கேட்பு அடிப்படையில் முதலமைச்சரின் ஒப்புதலின் படி சில மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சேவைக்காக தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

    • மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
    • பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கினாலும் இடையில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பயணிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது அக்கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் கொடுப்பவர்கள் என்றாலும் பணம் வாங்கினார்கள் என்றாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர்.
    • பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் நா.த.க.வில் மேலும் பலர் விலகி உள்ளனர்.

    சென்னை:

    சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து 3000 பேர் வெளியேறினர். 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர்.

    பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் நா.த.க.வில் மேலும் பலர் விலகி உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    • சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.

    விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×