search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் இரவு உணவு வழிபாடு நேற்று நடந்தது. ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமை திருப்பலி நிறைவேற்றினார்.உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ், அருட்தந்தை மைக்கேல் ஆகியோர் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அருட்தந்தை ஜெயசீலன் மறையுரையாற்றினார்.கடைசி இரவு உணவின் போது ஏசு 12 சீடர்களுக்கு பாதங்கள் கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்கினை சேர்ந்த 12 பேரின் கால் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.

    திருப்பலி முடிவில் ஏசு துன்பங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணி வரை இந்த ஆராதனை தொடர்ந்தது. இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கெடுத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மவுன ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பின்னர் பிற்பகல் 3 மணிவரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடக்கிறது.

    நாளை(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன.
    ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, பாஸ்கா வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து நள்ளிரவு ஈஸ்டர் திருப்பலி நடக்கிறது.

    இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்
    பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.

    அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.

    அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர் இறைவனிடம் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தார்.

    அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இறைவன் அவருக்கு ஓர் அற்புத ஆண் குழந்தையை (இஸ்மாயில்) அளித்தான்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் இப்ராஹிம் நபி அவர்கள் இறைவனுக்கு முழுமையாக அடிபணிகிறாரா என்பதை சோதிப்பதற்காக, அவர் மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுமாறு அவர்களின் கனவில் இறைவன் கூறினார்.

    இறைவனிற்கு கட்டுப்பட்டு தன் மகனிடம் உன்னை அறுத்து பலியிடுமாறு இறைவன் எனக்கு கட்டளையிட்டான் என்று கூறினார். இறைவன் கட்டளை என்றால் அதை நிறைவேற்றுங்கள் என்று இஸ்மாயில் கூறினார்.

    இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு பலியிட சென்றார். தன் ஆசை மகனின் கழுத்தை அறுத்தார். ஆனால் கழுத்து அறுபடவில்லை.

    இப்ராஹிம் நபி இறைவனின் சொல்லுக்கு முழுமையாக கட்டுப்பட்டார் என்பதை இறைவன் ஏற்றுக் கொண்டார்.

    இஸ்மாயிலை அறுப்பதற்கு பதிலாக வானவர் ஜிப்ரில் மூலம் ஓர் ஆட்டை வானத்தில் இருந்து கொடுத்து அதை அறுத்து பலியிட செய்தார்.

    அதன் நினைவாக பக்ரீத் பண்டிகை மூலம் ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் ஆட்டை அறுத்து ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பெயரே ஹஜ்ஜீப் பெருநாள் (பக்ரீத் தியாகத் திருநாள்).

    இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன் என்று நாவளவில் சொல்வது மிகவும் எளிது, அதை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

    தன் மகன் என்றும் பாராமல் இறைவன் சொன்ன கட்டளையை ஏற்று தன் மகனை உடனடியாக அறுக்கத் துணிந்த மாமனிதர் இப்ராஹிம் நபி.

    இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்.

     ப.முஹம்மது ரபீக்
    திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
    திருச்சி நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்கள் அல்லாபக்ஸ் என்கிற முகமது கவுஸ், நூர்தீன், சையத்சலாவுதீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

    தமிழ்நாடு வக்புவாரியத் தால் நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்களாக 3 ஆண்டுகளுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டள்ளோம். இந்தாண்டு தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்கா 1025-வது ஆண்டு சந்தனக் கூடு உரூஸ் விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 11-ந் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், 15-ந்தேதி துர்பத் என்னும் சுத்தம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது. அன்றைய தினம் காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர் வலம் தொடங்கி நத்தஹர்வலி தர்காவை வந்தடையும்.

    17-ந்தேதி சந்தனம் பூசும் வைபமும், 18-ந்தேதி இரவு தர்காவில் மின்அலங்காரம் நடக்கிறது. இந்த விழாவுக்கு வெளிமாநிலங்களில் இருந் தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

    மேலும் தர்காவுக்கு சொந்தமான குளத்தை தூர்வாரி தூய்மையாக பராமரிக்கவும், இங்கு வந்து தங்கும் பக்தர் களுக்காக தங்கும் விடுதியும் கட்டித்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.
    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு நேற்று அதிகாலை தொடங்கியது.

    முன்னதாக ரமலான் மாத முதல் பிறை 2-ம்தேதி தென்பட்டதை தொடர்ந்து இரவு சிறப்பு தொழுகை அனைத்து பள்ளி வாசல்களிலும் நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 4 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், நீர் பருகாமலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.

    பின்னர் மாலையில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.

    இதேபோல் தஞ்சை அய்யங்கடைத்தெரு, மேலஅலங்கம், வடக்குவீதி, சேப்பனாவாரி, பாம்பாட்டித்தெரு, மானம்புச்சாவடி, விசிறிகாரத்தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.
    கோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டு வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
    நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.

    சென்னை, ஏப். 2-

    முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள்.

    இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

    ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது.

    இன்று மாலை பிறை பார்த்த பிறகு இது குறித்து அறிவிக்கப்படும். வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.

    நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.

    அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள்.

    புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார் கள்.

    இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். * * *

    எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
    இறையச்சம் மிக்க மனிதனின் அன்றாட வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக சொல்லி இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது “உண்மை”.

    ஆம், ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நற்குணம்- “உண்மை பேசுதல். சொல்லிலும், செயலிலும் உண்மையாக நடந்துகொள்ளுதல்”.

    இஸ்லாத்தின் பார்வையில் உண்மை என்பது மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களை எடுத்துக்கொள்ளலாம். முதல் இறைத்தூதர் ஆதம் நபி முதல், கடைசியாக வந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அனைத்து இறைத்தூதர்களும் உண்மையைப் பேசி அதன் வழி நடந்துள்ளார்கள்.

    எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.

    “(நபியே!) இவ்வேதத்தில் இப்ராகீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார்”, என்று இப்ராகீம் நபி குறித்து (திருக்குர்ஆன் 19:41) தெரிவிக்கின்றது.

    இத்ரீஸ் நபியைக் குறித்து (திருக்குர்ஆன் 19: 56) கூறும்போது: “(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்”.

    இறுதித்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களை மக்கள் ‘உண்மையாளர்’, ‘நம்பிக்கையாளர்’ என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு ஜாதி, மத வேறுபாடு இன்றி அவரது சொல்லும், செயலும் அன்றாட வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் உண்மையாக அமைந்திருந்தது.

    இறை நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும், மறுமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:

    “இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள், மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்”. (திருக்குர்ஆன் 9:119).

    ஒரு மனிதன் உண்மையைப்பேசி, உண்மையாக நடந்து கொண்டால் அந்த செயலின் மூலம் அவன் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று நபிமொழிகள் குறிப்பிடுகின்றன.

    ‘உண்மை நன்மைக்கே வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையையே பேசி, உண்மையையே தேடினால் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஓர் உண்மையாளன் என்று எழுதப்படுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகிற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசும் காலமெல்லாம் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஒரு பொய்யன் என்று எழுதப்படுவான்’. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ‘உண்மை பேசுவதாக எனக்கு உத்தரவாதம் தாருங்கள்; சுவனத்தை நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகின்றேன்’. (நூல்: அஹ்மத்).

    ‘உண்மை என்பது மன அமைதியைத் தரும். பொய் என்பது கலக்கத்தைத் தரும்’. (நூல்: திர்மதி, அஹ்மத்).

    மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இந்த வாழ்க்கையில் உள்ள உலக இன்பங்களில் மயங்கி பொய்யும், புறமும் பேசி வாழ்வது நமது மறுமை வாழ்வை வீணடித்துவிடும். அந்த பாவச்செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம்.

    உண்மையே பேசுவோம், நன்மைகளையே நாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக. ஆமீன்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.
    ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு அடிப்படையான தேவை பொருளாதாரம் ஆகும். குடும்ப நிர்வாகம் என்று வரும்போது அவர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படையானவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதும், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற செலவினங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதும் குடும்பத்தலைவரின் தலையாயக் கடமையாக உள்ளது.

    அவர் ஒழுங்காக உழைக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றினால், அல்லது உழைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்தால், அல்லது உழைத்து, குடும்பத்திற்காக செலவு செய்வதில் கருமித்தனம் செய்தால் அந்த குடும்பத்தை வழி நடத்துவது சிரமமாகி விடும். இவ்வாறான குடும்பத்தலைவரின் அணுகுமுறையால்தான் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது.

    ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

    ‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

    ‘உன் வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ஒரு நாளைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்து, குடும்பத்தாருக்கு செலவளிப்பது மட்டும் போதாது. ஓராண்டுக்குத் தேவையான உணவு பண்டங்களை சேமித்து வைப்பதும் கூடும். பஞ்ச காலங்களில் பதுக்கிவைப்பதும், விலையேற்றம் பெற பதுக்கிவைப்பது மட்டுமே இஸ்லாத்தின் பார்வையில் கூடாது.

    ‘நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்று, தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்’. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: புகாரி)

    ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

    ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    “வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும்”. (திருக்குர்ஆன் 65:7)

    ‘உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

    இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அவுலியாக்கன்னி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.முன்னதாக கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் சந்தனக்கூட்டிற்கு முந்திரி, திராட்சை, ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கினர். சந்தனக்கூடு ஊர்வலம் கோடியக்காடு தர்காவிற்கு வந்தடைந்ததும், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, விழாக்குழு தலைவர் ஜின்னா மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அலிமெக்தர், சாபீக், கல்பான், இம்ராஜ் மற்றும் ஜாமத் மன்றத்தினர் கலந்துகொண்டார்.
    உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.

    வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வின்றி கண்விழித்து பாடுபடுகிறார்கள். இரவும் பகலும் உடலை வருத்தி, உணவை சுருக்கி, ஓய்வை குறைத்து, உடல்நலம் பேணாமல் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தானியங்கி இயந்திரத்தை போன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சில்லரை தேவை என்ற ஒற்றைக் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    மனித வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம். பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல, சொத்து மட்டுமே வாழ்க்கை அல்ல.

    “அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) கூறியதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது’ (திருக்குர்ஆன் 102:1,2) என்ற வசனங்களை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்) எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும், உடுத்திக் கிழித்ததையும், தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்”. (நூல்: முஸ்லிம்)

     “அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குச் சொந்தமானதாகும். அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    நமது சொத்து என்பது நாம் சேர்த்து வைத்தது அல்ல. அது நமது வாரிசுகளுக்கு உரியதாகும். நாம் இறந்ததும் அவற்றை அவர்கள் பங்கு வைத்து, பாகம் பிரித்துக் கொள்வார்கள். உண்மையான நமது சொத்து என்பது இதுவரைக்கும் நாம் உண்டு அனுபவித்ததும், உடுத்தி அனுபவித்ததும்தான். மூன்றாவதாக நாம் பிறருக்காக செய்த தர்மம் மறுவுலகில் நமக்கு நன்மைகளாக மாற்றப்பட்டு, நமது கணக்கில் சேமித்து வைக்கப்படும். மற்றவை நமது கையை விட்டு சென்றுவிடும்.

    உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.

    “உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாமல் மரணிக்கும் சமயம்) ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக்கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்’ என்று கூறுவான். ஆனால், அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 63:10,11)

    வாருங்கள் நண்பர்களே, வாழும் போதே தர்மம் செய்வோம். இறைவனின் அன்பை பெறுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையில் 95-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மாதம் 2-ந் தேதி முதல் ஒரு மாத காலமாக புகாரி ஷரீப் சபையில் பல்வேறு நிகழ்ச்சிகள் காலையிலும், மாலையிலும் நடைபெற்று வந்தது. இதில் இஸ்லாமிய ஹாமிதிய்யா சன்மார்க்க பள்ளி மாணவர்களின் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை 9 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது.

    இந்த பிரார்த்தனையை தமிழ் மொழிபெயர்ப்புடன் காயல்பட்டினம் மாதிஹூல் ஜலாலியா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் டி.எஸ்.ஏ. ஜெஸீமுல் பத்ரி ஆலீம் நிகழ்த்தினார்.

    சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனை உலக அமைதிக்காகவும், உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்கள் அகன்று போவதற்காகவும், அனைத்து நாடுகளும் சமரசமாக வாழ வேண்டியும், நல்ல மழை வேண்டியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, காயல்பட்டினம் நகர செயலாளரும், நகரசபையின் தி.மு.க. தலைவருக்கான வேட்பாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் செங்குழி ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், காயல்பட்டினம் நகரசபையில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மீராசாஹிப்,

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான வாவு செய்யது அப்துர் ரகுமான், முஸ்லிம் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் பாபு சம்சுதீன், காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங், இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அய்யப்பன், பாலமுருகன், கவுரி மனோகரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நிகழ்ச்சிகளை மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபை நிர்வாகிகள் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். தொடர்ந்து மாலையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.
    இந்த உலக வாழ்க்கை இன்பங்களால் நிரம்பியது. ஆனால் அந்த இன்பங்களின் மூலம் இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

    மனிதன் தன்னை வணங்க வேண்டும், தான் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை, நோக்கம்.

    பூமியில் பிறந்த மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது தூதர்கள் மூலமும், மனிதகுலத்திற்கு வழிகாட்டியான திருக்குர்ஆன் மூலமும் அல்லாஹ் விளக்கி இருக்கின்றான்.

    ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம், நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பது சிந்திக்கத்தக்கது.

    இருப்பினும், நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், பாவங்கள் செய்தாலும் நம்மை மன்னிக்கும் குணமும், கருணையும் கொண்டவனாக அல்லாஹ் இருக்கின்றான். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் கருணை மிக்கவன் என்பதை பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அல்லாஹ்வின் கருணைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலகத்தை படைத்து, அது எப்படி இயங்க வேண்டும் என்று செயல்படுத்தி வருவது ஆகும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்று களைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண் டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத் திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன”. (திருக்குர்ஆன் 2:164)

    அல்லாஹ் மீது நம்பிக்கையும், இறையச்சமும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அறிந்த போதிலும் பெரும்பாலான மனிதர்கள் அதை பின்பற்ற ஆர்வம் காட்டுவதில்லை. உலக வாழ்க்கையில் நிரம்பி கிடக்கும் இன்பங்களின் மீதே மனிதனின் மனம் லயித்துக்கிடக்கிறது.

    பணம், சொத்துக்கள், பதவி, அழகு, ஆசை, பொறாமை... என்று பல்வேறு வகையில் மனித மனம் அலைபாய்கிறது. இதன் காரணமாக அவன் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றான். இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான். இதனால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவன் ஆளாகிறான்.

    அதுபோன்ற சூழ்நிலையில் பலர் மனந்திருந்தி, தான் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பதுண்டு. அவ்வாறு தன்னிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் பெருங்கருணை மிக்கவன் அல்லாஹ். இதை திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்:

    “ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை யாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்”. (திருக்குர்ஆன் 4:110).

    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
    ×